×

அடையாளம் தந்த கேக் தயாரிப்பு…

இன்ஸ்டாவில் பிசியான ரத்னப்ரியா!

சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்னப்ரியா. ரத்னப்ரியா பர்த்டே கேக்ஸ் பேஸ்ட்லஸ் என்ற பெயரில் இவர் தயாரிக்கும் கேக்குகள் இணையத்தில் மிக பிரபலம். முறைப்படி கேக் தயாரிக்க கற்றுக் கொள்ளாத இவர், தனது தயாரிப்புகள் பிரபலமாகி ஹிட் அடித்த கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்…“எனக்கு சிறு வயது முதலே குக்கிங்கில் ஆர்வம் அதிகம். இதனால், பள்ளிப் பருவத்தில் இருந்தே, டிவி, பத்திரிகைகள் போன்றவற்றில் பார்ப்பதையும், படிப்பதையும் அவ்வப்போது வீட்டில் சமைத்துப் பார்ப்பேன். இந்தப் பழக்கம் நாளடைவில் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. நான் பார்த்ததையும், கேட்டதையும் சமைப்பதைப் போலவே, புதிது புதிதாக ஏதேனும் வித்தியாசமாக சமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால், நானே ஏதேனும் புதுப்புது டிஷ்களை தயார் செய்துபார்க்கத் தொடங்கினேன். அந்த சமயத்தில் கேக் தயாரிப்புகள் என்னை கவர்ந்தது. இதனால், பலவிதமான கேக்குகளை இணையம் மூலம் எப்படி தயாரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.

நான் கற்றுக் கொண்டதை அவ்வப்போது, வீட்டில் உள்ளவர்களுக்கும், எனது கல்லூரி தோழிகளுக்கும் செய்து கொடுப்பேன். எனது கேக்கின் சுவை பிடித்துப் போகவே, அக்கம்பக்கத்தினர், எனது தோழிகள் என பலரும் அவர்களது பிறந்தநாளுக்கு கேக்குகள் தயாரித்துக் கொடுக்கும்படி கேட்க, செய்து கொடுக்கத் தொடங்கினேன்.இந்தப் பழக்கம் எனக்கு திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு போன பிறகும் தொடர ஆரம்பித்தது. அங்கேயும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், நண்பர்கள் என பலரும் என்னிடம் கேக் செய்து தரும்படி கேட்டனர். இது இப்படியே வாய்வழியாக பரவி, அவர்களுக்கு தெரிந்தவர்களை அறிமுகம் செய்யத் தொடங்கினர். இதனால், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் கேக் செய்து தரும்படி ஆர்டர்கள் கொடுக்க தொடங்கினார்கள். இப்படி விளையாட்டாக தொடங்கியது தற்போது எனது அடையாளமாகவே மாறிவிட்டது.

இந்நிலையில்தான், கேக் தொழிலையே பிசினஸாக எடுத்து செய்யலாமே என்ற எண்ணம் வந்தது. இதனால், 2019ல் கேக் செய்வதை பிசினஸாக தொடங்கினோம். இதற்காக இன்ஸ்டாவில் ஒரு பக்கத்தைத் தொடங்கினோம். நல்ல வரவேற்பு வர தொடங்கியது. அதன்பிறகு நிறையவே ஆர்டர்கள் வரத் தொடங்கியது. தற்போது, வீட்டில் இருந்தபடியே வரும் ஆர்டர்களுக்கு கேக் செய்து தருகிறேன். கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் பிசினஸ் கொஞ்சம் டல் ஆனது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், லாக்டவுன் நாள்கள் தொடரத் தொடர மீண்டும் ஆர்டர்கள் வரத் தொடங்கின. லாக்டவுனால் மக்கள் வெளியே போக முடியாமல் இருந்ததால், எதையாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வமும் மக்களிடையே அதிகரித்தது. இதனால் என்னால் செய்து கொடுக்க முடியாதபடி அதிகளவில் கேக்குக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியது.

ஆரம்பத்தில் லாக்டவுன் எங்களை ஏமாற்றினாலும், அதே லாக்டவுன் எனது பிசினசை தூக்கி நிறுத்தியது.சாக்லேட் ஸ்பான்ஞ் கேக், சீஸ் கேக், பிரவுனி, ரெட் வெல்வட், லேமன் கேக், வொயிட் கேக் வித் வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி, மாஃப்பின்ஸ், கப் கேக்ஸ் என பேசிக் மாடல் கேக் முதல் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் லோட்டஸ் பிஸ்காஃப் கேக் வரை அனைத்துமே செய்வேன். அதில் எனது சிக்னேச்சர் கேக் என்றால், சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்தான். இதற்கான ஆர்டர்கள் திரும்பத் திரும்ப வருகிறது. எனது மற்றொரு ஸ்பெஷல், மினி கேக். இது உள்ளங்கை அளவுதான் இருக்கும். ஒரே முறையில் வாயில் இட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
ஆரம்பத்தில் நான் கேக் செய்ததற்கும், தற்போது செய்யும் கேக்குகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை நானே உணர்கிறேன்.

அந்த வகையில், இன்னும் புதுப்புது வகையான, வித்தியாசமான தயாரிப்புகளை கொடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக, நானே பலவித கேக் தயாரிப்புகளை அவ்வப்போது முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.
இதுதவிர, யார் என்ன கேக் வேண்டும் என்று கேட்கிறார்களோ அதனை செய்து கொடுப்பேன். மேலும், ஒரு தீம்மை சொல்லி கேட்டாலும் செய்து தருவேன். பிரவுனியும் என் தயாரிப்பில் அதிகம் விற்பனையாகும் ஒன்று. அதுபோன்று ஒருவர் அரை கிலோ கேக் ஆர்டர் செய்கிறார் என்றால், அது சரியாக அரை கிலோவில் இருக்கும்படி கொடுக்காமல், எடை கூடுதலாக இருக்கும்படிதான் செய்து தருவேன். இதுவும் கூட எங்களிடம் கஸ்டமர்கள் தேடி வர ஒரு காரணமாகும். இதில் சவாலான விஷயம் என்றால், சில நேரங்களில் ஒரே நேரத்தில் பல ஆர்டர்கள் வந்துவிடும். அதுபோன்ற சமயத்தில் சமாளிப்பதுதான் சிறிது சவாலாக இருக்கும்.

இந்த கேக் வகைகள் அனைத்தையும் நான் மட்டுமே தனியாக செய்கிறேன். உதவிக்கு வேறு யாரும் இல்லை. சவாலான இன்னொரு விஷயம் என்றால், சில கஸ்டமர்கள் நாளை கேக் வேண்டும் என்று, முதல் நாள் மாலைதான் அழைத்து சொல்வர்கள். சிலர் வெகு தூரத்தில் இருந்து அழைப்பார்கள். உடனடியாக கேக் வேண்டும் என்பார்கள். இதுபோன்ற நேரத்தில் சற்று கடினமாக இருக்கும். இதுபோன்ற சவாலான நேரத்திலும் கஸ்டமர்கள் கேட்டபடி கேட்ட நேர்த்தில் கேக் தயார் செய்து டெலிவரி செய்துவிடுவேன்.

கேக் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் கடைகளில்தான் வாங்குகிறேன். இதுதவிர, கிடைக்காத பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்வேன்.பிசிஏ வரை படித்திருக்கிறீர்கள். ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றால், கை நிறைய சம்பளம் கிடைக்குமே, இந்த கேக் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கிறதா? என்று பலரும் கேட்கிறார்கள். இதில் பெரிய வருமானத்தை நான் இதுவரை பார்க்கவில்லை என்றாலும், எனது தனித்துவத்தை வெளிப்படுத்தவும், எனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வதிலும் நான் நிறைவாக உணர்கிறேன்” என்கிறார்.

– தேவி குமரேசன்

The post அடையாளம் தந்த கேக் தயாரிப்பு… appeared first on Dinakaran.

Tags : Insta ,Nezapakam, Chennai ,
× RELATED சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங்...